என் வளர்ச்சியை தடுக்கவே டிக்டாக் தடை, வாட்ஸ்அப் கட்டுப்பாடு - சீமான்
நாம் தமிழர் கட்சிக்கு வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். சீமானின் பேச்சுகள் இணையத்தில் வைரலாவதும், திடீர் பரபரப்பை ஏற்படுத்துவதும் வழக்கம். அதன்படி சீமான் தற்போது அளித்துள்ள பேட்டி இணையதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் மட்டும் நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சீமான், டிக்டாக் செயலியில் தன்னை மட்டும் 7.5 கோடி இளைஞர்கள் பின்பற்றியதாகத் தெரிவித்தார். அதிலும் பின்பற்றிய அத்தனை பேரும் இளைஞர்கள் என்றும் இதனாலேயே பல்வேறு காரணங்களைக் கூறி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, வாட்ஸ் அப் செயலியில் தற்போது ஒரு செய்தியை ஒரு நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் பார்வேர்டு செய்ய முடியாத என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்தக் கட்டுப்பாடும் தனது வளர்ச்சியைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். தனது வளர்ச்சியைக் கண்டு அஞ்சும் மத்திய, மாநில அரசுகள் இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்ததாகவும் சீமான் கூறினார்.