
திமுக வந்தால் பிரியாணி கடைகள் திறந்திருக்க முடியுமா? – டிடிவி தினகரன்
மயிலாடுதுறை வேட்பாளர் கோமல் அன்பரசனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இப்போதே திமுகவினர் ஆட்சிக்கு வந்துவிட்டது போல நடந்து கொள்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் செல்வங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். திமுக வந்தால் பிரியாணி கடைகள் திறந்திருக்க முடியுமா? திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது மக்களின் கடமை, பண மூட்டையை மட்டும் நம்பியுள்ள மற்றொரு கூட்டணிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். விவசாயிகள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் கட்சியான அமமுக வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தில் மீத்தேன்,ஈத்தேன் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் அமமுக அனுமதிக்காது. படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கல்லூரி மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றிபெற பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும். 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காக மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும். 69% இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது எந்த சமுதாயமும் பாதிக்காத வகையில் சமநீதி வழங்கப்படும். நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறோம். வாக்குகளை பெற ஏமாற்று திட்டங்களை சொல்லவில்லை” என பேசினார்.