தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் – பிரதமர் மஹிந்த
தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் விளங்குகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷில் உரையாற்றியுள்ளார்.
அத்துடன், சுதந்திரம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு ஒரு அண்டை நாடு என்ற ரீதியிலும் நெருங்கிய நண்பராகவும் இலங்கை பங்களாதேஷுடன் பக்கபலமாக நிற்கிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷிற்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷின் தந்தை எனப் போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவரது உரையாற்றுகையில், “பங்களாதேஷ் மக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வில் பங்கேற்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பல சவால்கள் காணப்பட்ட போதிலும், இலங்கை மக்களின் ஐக்கியத்திற்கான செய்தியுடன் நான் இன்று இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.
எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு ரீதியான உறவுகளுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வங்காளத்திலிருந்து முதல் குடியேற்றவாசிகள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்ததாக பல அறிஞர்கள் நம்புகின்றனர்.
கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையே சிறந்த வர்த்தகப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் நம்பப்படுகிறது.
அத்துடன், 1971ஆம் ஆண்டில் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் புதிய தேசத்துடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடுகளில் இலங்கை ஒன்றாகும்.
பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான், தனது முழு வாழ்க்கையையும் பங்களாதேஷ் மக்களுக்காகவும், அவர்களின் மொழி மற்றும் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணித்தவர்.
1971 இல் ‘பங்களாதேஷ்’ என்ற புதிய தேசத்தை உருவாக்கும் வரை தனது சுதந்திரப் போராட்டத்தைத் தொடர அவர் உறுதியாக இருந்தார். ஆனால், தனது அன்பான நாடு குறித்து கண்ட கனவுகள் நனவாகும் போது அவர் உயிர் துறந்திருந்தமை துரதிஷ்டவசமாகும்.
சில பின்னடைவுகள் காணப்பட்ட போதிலும், திறமையான தலைமையின் கீழ் பங்களாதேஷ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. அதுவே, உங்கள் மதிப்பிற்குரிய தந்தைக்குச் செலுத்தும் சிறந்த மரியாதையாகும்.
இந்த 21ஆம் நூற்றாண்டில், ஆசியாவின் வளர்ச்சிக்கான பெரும் அபிலாசைகளுடன், சுதந்திரத்தை அடைய நம் முன்னோர்கள் செய்த எண்ணற்ற தியாகங்களைப் பற்றி நமது புதிய தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டும்.
சுதந்திரம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு ஒரு அண்டை நாடு என்ற ரீதியிலும் நெருங்கிய நண்பராகவும் இலங்கை பங்களாதேசுடன் பக்கபலமாக நிற்கிறது. பாரிய சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார மாற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்கை அடைதல் போன்ற எமது குறிக்கோள்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம்.
‘பங்களாதேஷ் ஏராளமான வளங்களை கொண்ட நாடு. உலகின் சில நாடுகளிலேயேதான் நம்மிடம் உள்ளதுபோன்ற வளம் பொருந்திய நிலங்கள் காணப்படுகின்றன’ என பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் தெரிவித்தார்.
கடல், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கு எமது இரு நாடுகளின் புவியியல் அமைப்பு எங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றது.
வங்காள விரிகுடாவில் ஒரு ‘நீல பொருளாதாரத்தை [Blue Economy]’ ஊக்குவிப்பதற்கான உங்கள் திட்டம் கடல்சார் விவகாரங்கள் குறித்த எங்கள் அணுகுமுறையைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் கருதப்படுகிறது. இது நமது நாட்டுக்கு ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் முதலீட்டுப் பங்காளியாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களாக நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு பரிமாற்றங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
விவசாயத் துறையில் பங்களாதேஷ் கண்டுள்ள பாரிய முன்னேற்றம் இலங்கையின் கவனத்திற்குத் திரும்பியுள்ளது. டாக்காவில் உள்ள சார்க் விவசாய மையம் செயற்பாட்டு ரீதியில் பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பங்களாதேஷ் தொடர்ந்து நமது விவசாய நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை எளிதாக்குகிறது. இத்துறையில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்வதில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் பங்களாதேஷ் மக்களை வறுமை மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து மீட்டெடுத்த எழுச்சியூட்டும் பயணம் ஒரு வளமான தேசத்திற்கு சான்று பகர்கின்றது.இத்தருணத்தில், பங்களாதேஷ் பிரதமருக்கும், உங்களது அரசாங்கம் மற்றும் மக்களுக்கும் எனது மனமார்ந்த அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்க இச்சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.