இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (05-01-2022) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.-இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் தெரிவிக்கையில்,,,குறித்த 12 இந்திய மீனவர்களும் இன்றைய தினம் புதன்கிழமை (5) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.இவர்களில் சிறுவர் ஒருவரும் அடங்குகின்றார்.இதன் போது குறித்த மீனவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு கடற்தொழில் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதன் போது குறித்த மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் ஒரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, குறித்த சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.குறித்த மீனவர்களில் சிறுவர் ஒருவர் உள்ளமையினால் நிபந்தனையின் அடிப்படையில் எச்சரிக்கப்பட்டு, குறித்த சிறுவன் தனது கல்வியை தொடர வேண்டும் என நீதவான் அறிவுறுத்தியதோடு குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்-