ஒரே ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பளியுங்கள்- சீமான்
கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் ஆகிய மூன்றும் லாபம் ஈட்டும் வியாபாரமாகியுள்ளதாக கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த மூன்றையும் விற்பனை செய்யும் நாடு நரகம் தான் என்று கூறியுள்ளார்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோட்டை குமாரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது :- ஒரு நாட்டின் முதன்மையான வளம் அறிவு தான். அந்த அறிவை வளர்க்கும் கல்வி, இந்நாட்டில் தனியார் கையில் கொடுத்து விற்பனை பொருளாக மாறியுள்ளது. அதேபோல், உயிரை காக்கும் மருத்துவமும் மற்றும் குடிநீரும் லாபம் ஈட்டும் வியாபாரமாகியுள்ளது. இம்மூன்றையும் விற்பனை பண்டமாக மாற்றிய நாடு, நரகம் தான். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீரையை இலவசமாக வழங்குவோம்.
மேலும், காவல்துறையில் ஆண்களுக்கு 8 மணிநேரமும், பெண்களுக்கு 6 மணிநேரமும் பணிநேரம் நிர்ணயிக்கப்படும். சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும். 6 மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வாய்ப்பளிக்கப்படும். பாலின் சந்தை மதிப்பு மட்டும் இந்த நாட்டில் 3 லட்சம் கோடியாக உள்ளது. டாஸ்மாக் கடையில் இருந்து 25 ஆயிரம் கோடி தான் வருகிறது. அதனால், டாஸ்மாக் கடையை அடைத்துவிட்டு தற்சார்பு பசுமை கொள்கையை நோக்கி போவோம்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கல்வியின் தரத்தை உயர்த்தியதால், மறுபடியும் அவருக்கு மக்கள் வாய்ப்பளித்தார்கள். அதிமுக, திமுக ஆட்சியில் வாழ்ந்து பார்த்த மக்கள், நீங்கள் எங்களுக்கு ஒரே ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பளியுங்கள். நாங்கள் ஊழல், பசி பஞ்சம் இல்லா நாடாக மாற்றி காட்டுகிறோம், என்று அவர் கூறினார். வேட்பாளர் மனுவில் வருமானத்தை தவறாக குறிப்பிட்டிருந்தார் சீமான் என்பதும் பரவலாகி வரும் செய்தியாகும்.