எங்களது அரசாங்கம் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் – மஹிந்த ராஜபக்ஷ
களுத்துறை மாவட்டத்தின் 2021ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் வேலைத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நாங்கள் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு அரசாங்கமாகும். நாம் நாட்டிற்காக நல்ல குழந்தைகளை உருவாக்க வேண்டும். கல்வி போன்றே நல்லொழுக்கங்களை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யாவிடின் எமது பிள்ளைகள் சமூகத்தில் எவ்வாறான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை குறிப்பிட முடியாது. பிள்ளைகள் தொடர்பில் நாம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். 24 மணிநேரமும் புத்தக பூச்சிகளாக அன்றி பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்.அனைத்து துறைகளிலும் பிள்ளைகளை பலப்படுத்துங்கள். விசேடமாக பிள்ளைகளை ஏதேனுமொரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.
விளையாட்டின் மூலம் பிள்ளைகள் வெற்றி தோல்வியை சமாளிக்க பழகிக்கொள்வர். இல்லையெனில், சமுதாயத்திற்கு வரும்போது வெற்றி தோல்வியை ஏற்க முடியாது பாதிக்கப்படுவர்.
பிள்ளைகளுக்காக அமைச்சர் ரோஹித அவர்கள் ஆரம்பித்த இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படுமாயின் அது பயனுள்ளதாக அமையும்” என்றும் குறிப்பிட்டார்.