தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் டி.டி.வி. தினகரன்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.ம.மு.க - தே.மு.தி.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கையெழுத்தானது. அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்துக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார்.
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் தினகரனை வரவேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்களும் தினகரனுடன் வருகை தந்தனர். டிடிவி தினகரன் - விஜயகாந்த் சந்திப்பு நிகழ்ந்தது.
இதன்பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுதீஷ், கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன், ’தமிழகத்தில் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை அமைக்க உருவானதுதான் இந்த கூட்டணி. சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குதான் இருக்கிறது. தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு அமமுக அழைத்ததில் என்ன தவறு உள்ளது.
தீய சக்தியான தி.மு.க அதன் கூட்டணியையும், துரோக சக்தியான அ.தி.மு.க அதன் கூட்டணியையும் தேர்தலில் வீழ்த்த தே.மு.தி.கவை கூட்டணிக்கு அழைத்தோம். மக்களை ஏமாற்றக்கூடிய வெற்று வாக்குறுதிகளைதான் திமுக, அதிமுகவும் அறிவித்திருப்பது மக்களுக்கே தெரியும். வெற்றி நடைபோடுகிறது என்று நீங்கள் கூறலாம் மக்கள் காதில் என்ன பூவா உள்ளது.
தே.மு.தி.க-வுக்கு சீட்டுகளை ஒதுக்கியதால் அ.ம.மு.க நிர்வாகிகள் தாமாக முன்வந்து வேட்பாளர்களை திரும்ப பெற்றனர். தமிழகம் முழுவதும் அ.ம.மு.க கட்சிக்கு கட்டமைப்பு உள்ளது. தேமுதிக - அமமுக கூட்டணி தலைமையினால் உருவாக்கப்பட்டது என்று சொல்வதை விட தொண்டர்களால் உருவானது என்றுதான் சொல்ல வேண்டும். அமமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இலக்கு என்று கூறினார்.