புர்கா அணிவதற்கு தடை – முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக பாகிஸ்தான் தெரிவிப்பு
இலங்கையில் புர்கா அணிவதற்கு தடை செய்யப்படுவதானது உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் கவலை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சாத் கட்டக் (Saad Khattak) தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “இலங்கையில் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும்.
சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் பிற சவால்களால் இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும்” என பதிவிட்டுள்ளார்.
நாட்டில் புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.