இலங்கையில் முதலீடு செய்ய சிறந்த முதலீட்டாளர்கள் தயாராக இருக்கிறார்கள் - நாமல்
இலங்கையில் முதலீடு செய்வதற்கு சிறந்த முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதனை அவதானிக்கும்போது, அது எங்களுக்கு பெரியதொரு சாதனையாகுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துபாய்க்கு அண்மையில் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “டுபாயின் ஷேக் சயீத் அறக்கட்டளை (Sheikh Zayed Foundation) இலங்கையிலுள்ள கிராமப்புற பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறைகளை வழங்கும் செயற்பாட்டுக்கு உதவுதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஷேக் சயீத் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் இயக்குநர் ஜெனரல் ஹமாத் சேலம் பின் கர்தூஸ் அல் அமேரி ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாகவே இந்த உதவி கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் துபாயிலுள்ள ஷேக்கின் குடும்பமும் இலங்கையின் திட்டங்களில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது.
இவ்வாறு இலங்கை திட்டங்கள் மற்றும் தொழில்களில் முதலீடு செய்வதற்கு, இதுபோன்ற சிறந்த முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதைப் பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய சாதனையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.