சசிகலாவின் அரசியல் விலகல் குறித்து வீரமணி விமர்சனம்
சசிகலாவின் அரசியல் விலகல், அதிமுகவை வளைத்துவிட பாஜக செய்கின்ற ஓர் ஏற்பாடு என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கையில்,
"சசிகலா பெங்களூருவிலிருந்து விடுதலையாகி வந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசியபோது, 'தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக' அறிவித்தார். 'அடக்குமுறைகளைச் சந்திப்பேன்' என்றார்!
விடுதலையானபோது என்ன சொன்னார் சசிகலா?
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில், அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, 'விரைவில் தொண்டர்களையும், மக்களையும் சந்திப்பேன்' என்றார்! அதிமுகவில் அவர் உரிமை கோரிய வழக்கையும் விரைவுபடுத்த முயற்சி எடுத்தார்.
இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை இணைத்தே தேர்தலை சந்திக்க வேண்டும்; அவர்களை அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவின் இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களுடன் பேசும்போது, 'சசிகலாவை ஏற்க அவர்களோ, அவர்களில் ஒருவரோ தயக்கம் காட்டி, மறுப்புத் தெரிவித்ததாக' ஊடகங்களில் செய்திகள் உலா வந்தன!
அவர்களை அதிமுக கூட்டணியில் இவர்கள் சேர்க்காவிட்டாலும், எங்களுக்குக் கொடுக்கும் இடங்களில் அவருக்குக் கொடுத்து இணைத்தால் மட்டுமே திமுகவைத் தோற்கடிக்க முடியும் என்று பயமுறுத்திய நிலையில், சசிகலா வந்தால் தன் நிலை கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்தால், அதற்கு இடமே இல்லை என்று தனது கட்சிப் பேச்சாளர்கள் மூலம் தெளிவுபடுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் பிரதமரைச் சந்தித்து வெளியில் வந்து, நூற்றுக்கு நூறு சசிகலாவை சேர்ப்பதில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுகவை வளைத்துவிட பாஜக செய்கின்ற ஓர் ஏற்பாடு, சசிகலாவை வைத்தே இந்த காய் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பது நமது கருத்து.
அரசியலிலிருந்து ஒதுங்குவது என்பது அரைப்புள்ளி போல! சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக வேகம் காட்டியவர். இப்பொழுது 'யூ டர்ன்' எடுத்து, அரசியலிலிருந்து 'ஒதுங்குவதாக' அறிக்கை வெளியிடுவதை சாதாரணமாகவோ, இயல்பானதாகவோ அரசியல் தெரிந்தவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
பிரிந்தவர்கள் இணைந்து நின்றாலும், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு ஒருபோதும் கிட்டாது! தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் கற்பிப்பிப்பது உறுதி! திராவிடம் வெல்லும்!" என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.