
சுடோக்கு புதிர் விளையாட்டின் ‘காட்பாதர்’ மகி காஜி காலமானார்
உலகம் முழுவதும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டுக்களில் சுடோக்கு எனப்படும் புதிர் விளையாட்டும் ஒன்றாகும். இந்தப் புதிர் விளையாட்டின் காட்பாதர் என அறியப்படும் மகி காஜி காலமானார். ஜப்பான் நாட்டை சேர்ந்த அவருக்கு வயது 69. புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மகி காஜி சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆகஸ்ட் 10- ஆம் தேதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுடோக்கு என்பது 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன், ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறு எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டு 18 ஆம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சுடோக்கு புதிர் விளையாட்டின் நவீன வடிவம் அமெரிக்காவில் முறைப்படுத்தப்பட்டதாக சில நேரம் கூறப்பட்டாலும், 1980-களில் தனது நிகோலி என்ற இதழில் வெளியிட்டு இந்த விளையாட்டை பெருமளவு பிரபலப்படுத்தியவர் மகி காஜி என்றே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும் ஒற்றையாக இருக்க வேண்டும் என பொருள்படும் ஜப்பானிய சொற்றொடரின் சுருக்கமான சுடோக்கு என்ற பெயரையும் அவரே உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.