சரத்குமார் மீது அதிக கோபத்தில் இருக்கும் கமல்ஹாசன்
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அன்றைய தினமே திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கைகோர்த்தார். டிடிவி தினகரன், கமல்ஹாசன் தலைமையில் 3வது அணியும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சரத்குமார் புதியதாக 3வது அணி உருவாகும் என அறிவித்தார். இந்தக் கூட்டணிக்கு தேமுதிக, கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பும் விடுத்தார். கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசிய சரத்குமார், நல்ல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்று கூறினார்.
அதோடு, சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களையும் அவர் அறிவித்தார். அதன்படி, வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் நமது கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என்றும், சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என சரத்குமார் அறிவித்தார். மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் முதல்கட்ட பேச்சுவார்ததை முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் 3வது அணி கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால், சரத்குமாரின் கூட்டணி முடிவை நிராகரிப்பதை போல, கமல்ஹாசன் பதிலளித்தது சமத்துவ மக்கள் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
“கை குலுக்கிச் சென்றுவிட்டால் கூட்டணி அமைந்து விட்டதாக அர்த்தம் இல்லை,” எனக் கமல்ஹாசன் கூறியது சரத்குமாரை கூட்டணியில் சேர்க்க முடியாது அல்லது இன்னும் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது, அதன்பிறகுதான் கூட்டணியை இறுதி செய்ய முடியும் என பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது.
உண்மையில், மற்றுமொரு காரணம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். ஆனால், அதனை கடைப்பிடிக்காமல் சரத்குமாரின் செயல் இருப்பதாக கமல்ஹாசன் உணர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.