அரசியலை விட்டு விலகினார் சசிகலா: அதிர்ச்சியில் ஸ்டாலின்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா நான்காண்டு சிறைவாசம் முடிந்து சென்னை திரும்பியபோது, திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென பொங்கியெழுந்து, “இதோ அதிமுக கொடியுடன் காரில் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டு விட்டார். இனி, அதிமுகவில் நடப்பதை அவரே கவனித்துக்கொள்வார்” என்று ஆவேசமாகப் பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.
சசிகலா சென்னைக்கு வந்த பின்பு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் அவர் பக்கம் ஓடிச் சென்று விடுவார்கள். ஆட்சி அடுத்த நிமிடமே கவிழ்ந்துவிடும். தனது 4 ஆண்டு கனவும் நனவாகி விடும் என்று கருதி ஸ்டாலின் இப்படி பேசி இருக்கலாம் என்கிறார்கள்.
அரசியலில் அமைதி,பொறுமை காக்க வேண்டும் என்பதை தனது தந்தை கருணாநிதியிடம் இருந்து எப்படி ஸ்டாலின் கற்றுக் கொள்ளாமல் போனார்? என்பது புரியாத புதிராக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்களே கருத்து தெரிவிக்கும் அளவிற்கு அவருடைய பேச்சு அமைந்து இருந்தது. அதன் பிறகும் ஆட்சி கவிழவில்லை. என்றபோதிலும், ஸ்டாலின் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறுகின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.
சசிகலா தொடர்ந்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவார், அதனால் தேர்தலில் அதிமுக வாக்குகள் அப்படியே சிதறும், எளிதில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கணக்கு போட்டு இருந்ததாகவும், அதனால் சசிகலா வெளியிட்ட அறிவிப்பால் அதிகம் அதிர்ச்சியடைந்தது, அவர்தான் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு நிலவுகிறது.
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு எதார்த்த நிலை புரிந்தது. தன்னை சந்திக்க அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் திரண்டு வந்து வரவேற்பார்கள் என்று நினைத்திருந்த அவர் பெருத்த ஏமாற்றமும் அடைந்தார். மேலும், கட்சியும், ஆட்சியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்படுவதையும் அவர் உணர்ந்தார். அதனால் அரசியலில் இருந்து விலகிவிட்டார்.