மதுரை மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சியான செயல்!
மதுரை ஆனையூர் பகுதி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த காளிமுத்து மாரீஸ்வரி தம்பதியினரின் ஒரே மகன் பழனிகுமார். இவரது தந்தை காளிமுத்து கொத்தனார் வேலைக்கு சென்றாலும் குடும்பத்தை கவனிக்காமல் இருந்துள்ளார். காளிஸ்வரிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்து வரும் நிலையிலும், அப்பகுதியில் வீட்டு வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வந்தார்.
21 வயது நிரம்பிய தனது மகன் பழனிக்குமார் பிறவியிலிருந்தே மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தனது மகனை வாரத்திற்கு இருமுறை அழைத்துச் செல்வது வழக்கம். வாடகை ஆட்டோ பிடித்து கொள்வதற்குப் போதிய வருமானம் இல்லாததால் கஷ்டப்பட்டு வந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருசக்கர வாகனம் வேண்டும் என மனு செய்திருந்தார்.
இந்த மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனது சொந்த செலவில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். அந்த வாகனத்தில் மாரீஸ்வரி தனது மகன் பழனிகுமாரை அமரவைத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த வாகனத்தை வழங்கினார். அந்த வாகனத்தில் பழனிக்குமாரை அமரவைத்து ஆட்சியர் வளாகத்தில் வாகனத்தை ஓட்டினார்.
மாவட்ட ஆட்சியரின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.