இந்தியாவுக்கு இதைவிட சிறப்பான துவக்கம் இருக்காது – பிரதமர் மோடி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிரதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் மீராபாய் சானு. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
2021 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான தொடக்கம் இருக்க முடியாது. மீராபாய் சானுவின் சிறப்பான செயல்பாடுகளால் இந்தியா உற்சாகமடைந்துள்ளது. பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்கப்படுத்தும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.