பெண்கள் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளிற்காக குரல் கொடுப்பதற்கு வடக்கு கிழக்கில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்
பெண்கள் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளிற்காக குரல் கொடுப்பதற்கு வடக்கு கிழக்கில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை என்பதானது வெட்கக்கேடான விடயமாகும் என முன்னாள் வடக்கு மாகாண மகளீர், சிறுவர் விவகார அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழக கட்சியின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கில் இன்று சிறுவர்கள் தூபிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்று நீண்டு செல்கின்றன. குறிப்பாக இறுதி யுத்தம் இடம்பெற்றபோது பெண்கள் சிறுவர்களிற்கு எதிராக அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக சர்வதேசத்திடம் நீதி கோரியிருந்தோம். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.அன்று அவர்களிற்கான தண்டனை கிடைத்திருந்தால் சிறுவர் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், சித்திரைவதைகள், பாலியல் வன் கொடுமைகள் நடந்திருக்காது.இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் சாட்சியங்களுடன் சர்வதேசத்திடம் நீதி கோரியிருந்தோம். கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அன்று சாட்சியங்களுடன் நீதி கோரியிருந்தபோது அவர்களிற்கான தண்டனை பெற்றுக்கொடுத்திருந்தால் இன்று இவ்வாறான நிலை நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது.சிறுவர் துஸ்பிரயோகங்கள், இணையவழியில் சிறுவர்களை விற்பனை செய்தல், பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தல் என இலங்கையில் நாளாந்தம் பல்வேறுபட்ட செய்திகள் வெளியாகிவருகின்றது. இந்த நிலையில் அண்மையில் ஒரு சிறுமி இணையவழியில் விற்பனை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியைின் முதல் பாதுகாவலரான பெற்றோர் விற்பனை செய்திருக்கின்றார்கள். இதற்கு பின்னால் பொலிஸ் உயரதிகாரி, இராணுவ உயரதிகாரி, உத்தியோகத்தர்கள் என பலர் இருந்ததாக செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.இது போன்று யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நடந்த சிறுவர் மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் சாட்சியங்களுடன் நாங்கள் நீதி கோரியபோது அவர்களிற்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தால், இவ்வாறான குற்ற செயல்கள் இடம்பெற்றிருக்காது.இதேவேளை, அமைச்சர் ரிசாட் பதியுத்தீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி தொடர்பில் பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றது. அவரது உடற்கூற்று பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றது. அந்த அறிக்கைக்காகவே நாங்களும் காத்திருக்கின்றோம்.அந்த அறிக்கை கிடைத்த பின்னர்தான் குறித்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எம்மால் அறிய முடியும். எனினும் சிறுவர் தொழிலாளியான குறித்த சிறுமியை அமைச்சர் வேலைக்கு அமர்த்தப்பட்டதும், அவரது பெற்றோரின் வீட்டுக்கு செல்ல விடாதும், தொடர்பை ஏற்படுத்தாது வைத்திருந்தமையானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.இது போன்று மேலும் அரசியல்வாதிகள் வீடுகளிலும், அதிகாரிகள் வீடுகளிலும் சிறுவர்கள் வேலைகளிற்காக அமர்த்தப்பட்டிருப்பார்கள் எனில் அது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.இவ்வாறு வடக்கு கிழக்கில் மாத்திரமல்லது நாடு முழுவதும் இன்று சிறுவர் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து செல்கின்றது. நாடு முழுவதும் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.இதேவேளை வெட்கப்படவேண்டிய விடயம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிடுகின்றேன். அதாவது, வடக்கு கிழக்கில் போட்டியிட்ட கட்சிகளிலிருந்து எந்தவொரு பெண் பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்துக்கு கிடைக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் தேசியப்பட்டியல் ஊடாகக்கூட நியமிக்கப்பட்டிருக்கவில்லை.அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தால், சிறுவர் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் குரல் கொடுத்திருக்க முடியும் என்பதுடன், இறுக்கமான சட்டங்களையும் கொண்டு வந்திருக்க முடியும்.நாட்டில் பெண்கள் விவகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை. துஸ்பிரயோகங்களையும், வன்முறைகளையும் பிரயோகிக்கின்றவர்களாக ஆண்களாகவே உள்ள நிலையில், ஆணொருவரே அதற்கு அமைச்சராக இருப்பது இறுக்கமான சட்டங்களை நிறைவேற்றவோ அல்லது அதற்கெதிராக குரல் கொடுக்கவோ அக்கறை காட்டமாட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.