கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி முற்றுகையிடப்பட்டு 4 கனரக வாகனங்களுடன் ஐவர் கைது
கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி முற்றுகையிடப்பட்டு 4 கனரக வாகனங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வனப்பகுதியிலேயே குறித்த முறையற்ற கிரவல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மண் அகழ்வாராய்ச்சி தள சட்ட பிரிவினை அமுலாக்கும் அதிகாரிகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.இதன்போது கிரவல் அகழ்விற்கு அனுமதிக்கப்பட்டமைக்கு மாறாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மீது நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மேலதிகமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டமை மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாறாக 20 அடிக்க மேல் அகழ்வு மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்பட்ட 4 கனரக வாகனங்கள் மற்றம் அதன் இயக்குனர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கிரவல் அனுமதி பெற்றுள்ள நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.