முல்லைத்தீவு பாலைப்பாணி கிராமத்திற்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமை சிரமங்களை எதிர்கொள்வதாக குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பாலைப்பாணி கிராமத்திற்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமை போக்குவரத்து வசதியின்மை தொழில் வாய்ப்பின்மை, என்பவற்றால் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 65 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் பாலைப்பாணி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த காலயுத்தம் காரணமாக அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியர்வையடுத்து, மேற்படி கிராமத்தில் 65 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறி ஒன்பது ஆண்டுகளாகிய நிலையிலும் மேற்படி கிராமத்திற்கான பிரதான வீதியாக காணப்படும் வன்னிவிளாங்கும் மூன்றுமுறிப்பு வீதி இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன், மழைகாலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
இதனைவிட குறித்த கிராமத்தில் தினமும் காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதுடன், பாலப்பாணி கிராமத்தில் இருந்து வன்னிவிளாங்குளம் மற்றும் மாங்குளம் உள்ளிட்ட பாடசாலைகளுக்கு தினமும் ஒன்பது கிலோமீற்றர் தூரம் காட்டு பாதைவழியாக பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் யானைகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கிராமத்தில் வாழும் அனைத்து குடும்பங்களும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றன என்றும் தற்போதைய கொரோனா தாக்கம் காரணமாக எந்தவித தொழில் வாய்ப்புக்களும் இன்றியே வாழ்ந்து வருவதாகவும் மேற்படி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.