வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - அருந்தவபாலன்
வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை என கட்சியின் பேச்சாளரும், கொள்கைப்பரப்பு செயலாளருமான அருந்தவபாலன் பதில் வழங்கியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெறற் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அவரிடம் ஊடகவியலாளர் வினவியபோதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.சமகால அரசியல் நிலை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அருந்தவபாலன், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்கும்போது, அரசிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாது தமிழர் உரிமைக்காக பேசுபவர்களையும் அழைத்து சென்று பேசுவதே பலமாக அமையும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.குறித்த விடயம் தொடர்பில் வினா தொடுத்த ஊடகவியலாளர், இவ்வாறான கருத்தையே தங்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தற்போது உள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தபோது கருத்துக்களை முன்வைத்திருந்தார். தமிழரசு கட்சி பங்காளி கட்சிகளை அழைத்து செல்வதில்லை என அவர் கூறி வந்திருந்தார். இந்த நிலையில் தற்போது நீங்கள் கூறும் விடயத்தை அவர்கள் ஏற்பார்களா என அவரிடம் வினவினார்.பதிலளித்த அருந்தவபாலன்,குறித்த குற்றச்சாட்டு பொதுவாக இருந்தது. அதற்கு மக்கள் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர். தற்போது அது தொடர்பில் அவர்களும் வாய் திறந்துள்ளனர். ஆனாலும் தற்போது உள்ள சூழலில் அனைவரும் இணைந்து ஒரு பலமாக பேச்சுக்களில் ஈடுபடுவதே பொருத்தமானது என அவர் இதன்போது தெரிவித்தார்.அரசின் சலுகைகளிற்கு இணங்காத தமிழ் தேசிய கட்சிகள் என்ற விடயத்தை இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போது உள்ள அரசின் சலுகைகளிற்கு இணங்காதவர்களா? அல்லது எந்தவொரு காலத்திலும் சலுகைகளிற்கு விலை போகாதவர்களா எனவும், ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் நீங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் சலுகைகளிற்கு விலை போய்விட்டது என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தீர்கள். அதனால் மக்கள் தெளிவடைய இந்த கேள்வி அமைகின்றது என ஊடகவியலளாளர் வினவினார்.அதற்கு பதிலளித்த அருந்தவபாலன், கடந்த காலங்களில் அவ்வாறான விமர்சனங்கள் எழுந்திருந்தது. ஆனால் அதனை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். இந்த நிலயைில் கடந்தவை மறந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்காக பலமான சக்தியாக பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.அண்மையில் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளையும் இணைத்து மாகாண சபை தேர்தலில் போட்டியிட உள்ளதான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். அது தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்.அதற்கு பதிலளித்த அருந்தவபாலன்,தேர்தலிற்காக கூட்டு சேர்வதற்கு நாங்கள் தயாரில்லை. உண்மையாக மக்களிற்கு குரல் கொடுக்கவும், மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதும் எமது நிலைப்பாடு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாத்திரமே நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருப்போம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.இதேவேளை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது,அரச கரும மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்களிலும் இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியிலேயே கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, அரச தகவல் நிலையத்திலும் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது. அங்கு குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு இடங்களில் தமிழ் மொழியில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. தவறான உச்சரிப்புக்கள் அங்கு காணப்படுகின்றன. கிராமங்களின் தமிழ்ப் பெயர்கள் வேறுபட்டு காணப்படுகின்றது. இவ்வாறான நிலை தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அரச கரும மொழியான தமிழ் மொழியையும் முறையாக பயன்படுத்தும் வகையிலான கோரிக்கையை எமது கட்சி இன்று விடுக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.