சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் காயம்
கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை இன்று (21-06-2021) அதிகாலை காவல் கடமையில் இருந்த படையினர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது டிப்பர் வானத்தல் மற்றைய படையினர் மீது மோத முற்பட்ட சமயம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை நாகேந்திர புரம் பகுதியில் சட்டவிரோத மண் ஏற்றுவது தொடர்பாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் கண்டாவளை முரசுமோட்டை ஆகிய பகுதிகளில் இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டு சட்டவிரோத மணல் அகழ்வுகள் கட்டுபடுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று அதிகாலை புளியம்போக்கணை பகுதியில் சட்டவிரோதமாக மணல்ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றை வீதி காவல் கடமையில் நின்ற படையினர் மறித்த போது இராணுவத்தினர் மீது டிப்பர் வாகனத்தால் மோத முற்பட்ட சமயம் காவல் கடமையில் இருந்த மற்றைய ஒரு ராணுவ வீரர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.இதில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு அப்பால் வாகனத்தை செலுத்தி சென்று டிப்பர் வாகனத்தில் இருந்த மண் இறக்கப்பட்டுள்ளது. புளியம்பொக்கணை பகுதியில் நாகதம்பிரான் ஆலய சந்தி மற்றும் முசிலம்பிட்டி சந்தி ஆகியவற்றில் இராணுவக் காவலரண்கள் இருக்கின்ற போதும் அவற்றுக்கு இடைப்பட்ட பகுதியால் சென்ற போது டிப்பர் வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்ட சமயமே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.