இராணுவத்தினரின் உதவியுடன் சட்டவிரோத மணல் அகழ்வுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கண்டாவளை கனகராயன் ஆறு மற்றும் ஊரியான் பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகள் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கிராம அலுவலர் பிரிவு மற்றும் முரசுமோட்டை கிராம அலுவலர் பிரிவு கண்டாவளை கிராம அலுவலர் பிரிவு ஆகிய பகுதிகளிலும் கனகராயன் ஆற்றுப் படுகை மற்றும் அதனை அண்டிய வயல் நிலங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வந்தன. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இரானுவத்தினரின் உதவி பெறப்பட்டு மணல் அகழ்வுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன் தொடர்சியாக கண்டாவளை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ பொது பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று மேலும் மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்ற இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு ஏற்கனவே இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர புதிய காவலரண் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிராம மட்ட அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.சட்டரீதியான மணல் அகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு துறை சார்ந்த அதிகாரிகளும் திணைக்களங்களும் இழுத்தடித்து வருவதனாலேயே இந்த சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகின்றது.சட்டரீதியான மணல் அகழ்வுகளுக்கு உரிய இடங்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கான அனுமதிகளை வழங்குகின்ற போது இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் குறையும் என்றும் பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.