கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியக் கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(18.06.2021) நடைபெற்ற கொரோனா பரவல் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மிகவும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஆடைத் தொழிற்சாலையை விரைவில் இயங்க வைக்க முடியும் எனவும் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆடைத் தொழிறசாலை நிர்வாகிகள், ஆடைத் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்காமல் இருக்குமானால், பணியாளர்கள் வருமான இழப்பினை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதை சுட்டிக்காட்டியதுடன், ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடுளை நிறுத்தி வைக்கும் அளவிற்கு கொரோனா பரவல் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலாக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தனர்.
அதேவேளை, நடைமுறையில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.இதன்போது, சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரமே 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களுக்கும் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், துறைசார் அமைச்சருடனும் குறித்த வாழ்வாதாரக் கொடுப்பனவு தொடர்பாக கடற்தொழில் அமைச்சரினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.