
மறைந்த போப்பாண்டவரின் இறுதி சடங்கில் கனடிய ஆளுநர் நாயகம் கலந்துகொள்கிறார்
வத்திக்கானில் சனிக்கிழமை நடைபெறவுள்ள போப்பாண்டவர் பிரான்சிஸின் இறுதி சடங்கில், கனடாவை பிரதிநிதித்துவப்படுத்த ஆளுநர் நாயகம் மேரி சைமன் பங்கேற்கவுள்ளதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
தற்போது மிகவும் முக்கியமான தேர்தல் சூழ்நிலை நிலவுவதால், நான் இந்த சடங்கில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், கனடா உயர்மட்டத்தில், சரியான முறையில் பிரதிநிதித்துவம் பெறுகிறது,” என கனடிய பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
சைமனின் கணவர் விட்ட் ஃபிரேசர், மற்றும் செனட் சபாநாயகர் ரைமொண்ட் கான்யே ஆகியோரும் கனடா குழுவில் பங்கேற்பார்கள் என கனடா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இறுதி சடங்கு வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கனடாவின் ஐந்து கார்டினல்களும் சடங்கில் பங்கேற்க உள்ளதாக டொரண்டோ வாள் ஆயர் கார்டினல் ஃப்ராங்க் லியோ கூறியுள்ளார். மேலும் பல ஆயர்களும், மனிடோபா மெடிஸ் கூட்டமைப்பின் தலைவர் டேவிட் சார்ட்ராண்ட் உள்ளிட்டவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.