
யாழ் மாவட்ட வாக்களிப்பு நிலையங்கள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் விசேட தகவல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 292 வாக்களிப்பு நிலையங்கள் தபால் மூல வாக்களிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள நிலையில் 21,064 பேர் யாழ். மாவட்டத்தில் தபால் மூலமாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்தினை தெரிவிக்கும் போது அவர் இந்த தகவலை வழங்கினார்.
யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 243 வட்டாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. யாழ் மாநகர சபை, மூன்று நகர சபைகள்,13 பிரதேச சபைகளுக்குமாக 17 சபைகளுக்கு இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.
இந்த தேர்தலுக்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றது. மொத்த வாக்களார் எண்ணிக்கையாக 4,98140 பேர் காணப்படுகின்றனர்.
இதேவேளை தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் 24,25 மற்றும் 27,28 ஆம் திகதிகளில் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் நடாத்தப்படவுள்ளது.
இதன்படி 292 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்களிப்பு யாழ் மாவட்டத்தில் இடம்பெற காத்திருகின்றது. அதேவேளை வாக்களிப்பு கடமைகளுக்காக 292 அத்தாட்சி படுத்தல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் 21ஆயிரத்து 64பேர் வாக்களிக்க அஞ்சல் வாக்களிப்புக்காக தகுதி பெற்றுள்ளனர். அஞ்சல் வாக்களிப்புக்காக விசேடமாக உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் பயிற்றுவிக்க பட்டுள்ளனர்.
மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக 28வலயங்கள் தெரிவுசெய்யபட்டு வலய செயற்பாடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மேற்பார்வை செயற்பாடுகளுக்காக 240உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் நீதியானதும் சுதந்திரமானதும் தேர்தல் நடாத்த நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு யாழில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000