
நேட்டோ நாடுகளின் அமைதி காக்கும் படைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளாது - ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்
எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தின் கீழும் யுக்ரைனில் உள்ள நேட்டோ நாடுகளின் அமைதி காக்கும் படைகளை தங்களது நாடு ஏற்றுக்கொள்ளாது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) தெரிவித்துள்ளார்.
யுக்ரைனில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகளுக்கு இடையில் சவுதி அரேபியாவில் நேற்று இடம்பெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அத்துடன், வேறு எந்தவொரு தலைமையின் கீழும் ஆயுதப்படைகள் தோன்றுவது எதனையும் மாற்றி விடாது எனவும், நிச்சயமாக அதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்குத் தாம் அழைக்கப்படாமை ஆச்சரியமளிப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான குழுக்களை நியமிப்பதற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.