10 ரூபாய்க்கு சோறு மோசடி
சேலத்தில் மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.10க்கு உணவு அளிப்பதாக ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். 10 ரூபாய்க்கு உணவு என்பதால் ஏராளமான மக்கள் அந்த மண்டபத்திற்கு படையெடுத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பணம் முதலீடு செய்தால் 7 மாதங்கள் இரட்டிப்பாக கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளனர்.
அதை நம்பிய பலரும் ஆயிரங்கள் முதல் லட்சங்களில் பணத்தை அள்ளிக் கொடுத்து முதலீடு செய்துள்ளனர். இதனால் நேற்றும் அந்த கும்பல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 2 நாட்களில் 2 லட்சமாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளது. இதை கேட்ட மக்கள் பலர் வெளியே கடனுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு முதலீடு செய்ய வந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அது புரியாத மக்கள் சிலர் போலீஸார் தாங்கள் லாபம் பெறுவதை தடுத்துவிடுவார்களோ என அவர்களை எதிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு மக்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.
அதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் உள்ளே சென்று சோதனை நடத்தியதில் சரியான ரசீது கூட கொடுக்காமல் ரூ.100 கோடி வரை வசூலித்து வைத்திருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அறக்கட்டளை உரிமையாளர் விஜயாபானுவை விசாரித்தபோது அவர் மீது ஏற்கனவே பல மோசடிகள் சம்பவங்களை செய்துள்ளவர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீஸார், தங்க நகைகள், ரொக்கம் என பல கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.