ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் – மக்களை அச்சுறுத்தும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள்
இம்முறை பெரும்போக பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கான கொள்முதல் விலை 140-170 ரூபாயாக அதிகரித்திருப்பதால், எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் என்று சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் ஒரு கிலோகிராம் ஈர நெல்லின் விலை 115-120 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இருப்பினும், சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஈரமான நெல் ஒரு கிலோகிராம் 95 ரூபாய்க்கும், உலர்ந்த நெல் ஒரு கிலோகிராம் 115 ரூபாய்க்கும் வாங்க கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது
அதன்படி, ஒரு கிலோ சம்பா நெல்லை 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 130 ரூபாய்க்கும் வாங்க கடன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது
இதற்கிடையில், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயம் செய்வதை அரசாங்கம் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தனியார் துறையினர் அதிக விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால், குறைந்த அளவில் நெல் வாங்க காத்திருக்கும் அரசாங்கத்துக்கு, விவசாயிகள் நெல் விற்க முடியாது என கூறுகின்றனர்.
இதேவேளை, நாட்டில் உள்ள பல சிறிய அளவிலான நெல் ஆலைகள் நெல் கையிருப்பு இல்லாததால் மூடப்பட்டுள்ளன.
பல விவசாயிகள் நெல் விலையை உயர்த்தியுள்ளதால், அந்த விலையில் நெல்லை வாங்குவது, அரிசியை உற்பத்தி செய்வது மற்றும் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வது சாத்தியமில்லை என குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது பல கடைகளில் விற்பனைக்கு அரிசி இல்லை, உள்ளூர் பாஸ்மதி அரிசி மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஒரு கிலோகிராம் உள்ளூர் பாஸ்மதி அரிசி 250 - 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.