உள்ளூராட்சி தேர்தல் - சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
இந்த மனுக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர் சமர்ப்பித்தனர்.
இந்த மனு, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது.
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், அவை நிறைவேற்றப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
000