பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில் இருக்கும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பதில் அளிக்கும் போது அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறித்த செய்தியானது அனுர தலைமையிலான அரசின் நிலைப்பாடும் கடந்த கால அரசாங்கங்களின் நிகழ்சி நிரலை ஒத்ததாகவே இருக்கினிறது எனவும் இந்த அரசும்மக்களை ஏமாற்றுகின்றது என்றும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்பதாக சிறீதரன் எம்.பி தனது சிறப்புரிமை கேள்வியில், கடந்தவாரம் தாம் இந்தியாவுக்குச் சென்ற தருணத்தில் தமக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும் என விமான நிலையத்தில் இருக்கும் குடிவரவு - குடியகழ்வு அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தியதாகவும் தனக்கு எதிராக எவ்வித வழக்கும் விசாரணைகளும் இல்லாத சூழலில் இவ்வாறு செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தன்னுடன் வருகை தந்திருந்தார். அவர் இந்த விடயங்களை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த உதவினார் என்றும் சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
இதன்போது எழுந்த ரவூப் ஹக்கீம், அதிகாரிகளின் இந்த செயல்பாட்டை கண்டித்ததுடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய விசாரணைகளை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் ஆளும் தரப்பில் சிறீதரன் எம்.பியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ”சிறீதரன் எம்.பிக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் பின்னர்தான் அறிய கிடைத்தது.
இதுகுறித்து வருந்துகிறோம். அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் எவ்வாறு தடைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அங்கிருந்த அதிகாரிகள்தான் இதனை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை அறிக்கைகளை கோரியுள்ளோம்.
இந்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை. புதிய சட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாமையால் பயங்கரவார எதிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
இருக்கும் சட்டத்தை பயன்படுத்த முடியும். அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.