நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க மாட்டோம் என ஒருபோதும் கூறவில்லையாம் - அமைச்சர் விஜித ஹேரத்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனங்கள் வழங்கப்படும். வாகனங்கள் வழங்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத் இருப்பினும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கான வரிச் சலுகை அனுமதிகள் வழங்கப்படாது என்றும் கூறினார்.
மேலும் - ”ஆளும் கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வழங்கப்படும்.
அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கடமைகளைச் செய்ய வாகனமொன்று அவசியம். அதைப் பயன்படுத்தும் முறையை நாங்கள் மாற்றி வருகிறோம். வாகனங்கள் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். தேர்தலின் போது, எம்.பிகளுக்காக வாகன கொள்வனவு அனுமதியை ரத்து செய்வோம் என்று மக்களிடம் கூறினோம்.
எந்தவொரு எம்.பி.க்கும் வரி இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படாது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு இரண்டு மாற்று முறைகள் அறிமுகப்படுத்தப்படும். முதலாவது, ஐந்து ஆண்டுகளின் முடிவில் வாகனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது.
இரண்டாவது, தேய்மானம் மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் வாகனத்தின் மதிப்பை மதிப்பிடு செய்து உரிய தொகையை செலுத்தி வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000