வீரர்கள் ஒழுக்கமான முறையில் நடந்து கொள்ளாமையே தோல்விகளுக்கான காரணம் - தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட ர்- கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக அணியின் வீரர்களது போட்டிக் கொடுப்பனவை தாமதிக்க ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டம் ஒன்று அண்மையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், அணியின் வீரர்கள் ஒழுக்கமான முறையில் நடந்து கொள்ளாமையே தோல்விகளுக்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணியின் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை கடத்தியது அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் அணியின் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டு கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் போது வழங்கப்படும் வரப்பிரசாதங்களை குறைப்பதற்கு ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்திய அணி வீரர்கள் உள்நாட்டு தொடர்களில் கவனம் செலுத்துவது குறைவு என்பதால் அவர்களின் செயற்திறனை கணிப்பிட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை தாமதப்படுத்தி வழங்குவது குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதுவரையில் எதனையும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000