முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட முப்படையிரும் இன்றுமுதல் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்படி இன்றுமுதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
முப்படை வீரர்கள் நீக்கப்பட்டாலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.