ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்கெட்டில் விபத்து
ஜெர்மனி நாட்டில் கிறிஸ்துமஸ் மார்கெட்டில் மிக மோசமான ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. அங்குத் திரண்டிருந்த மக்கள் மீது கார் தாறுமாறாக மோதியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 200+ காயமடைந்தனர். இதற்கிடையே இந்த கொடூர சம்பவத்தில் இந்தியர்களும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கும் கூட களைகட்டியுள்ளன. பெரும்பாலான சர்வதேச நகரங்களில் சிறப்பு மார்கெட்கள் அமைக்கப்படும். இதன் மூலம் மக்கள் எளிதாக தங்களுக்குத் தேவையானதை வாங்க வேண்டும். அதேநேரம் இதுபோல மக்கள் ஒன்றுகூடும் இடங்களை வைத்து சில மோசமான சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது ஜெர்மனியில் நடந்துள்ளது. அங்குள்ள மாக்டேபர்க் என்ற பகுதியில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்புச் சந்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்த சந்தையில் வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் செய்ய பல நூறு பேர் குவிந்து இருந்தனர். அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தாறுமாறாக வந்த கார் ஒன்று அந்த கூட்டத்தில் பாய்ந்தது. இந்த கொடூர விபத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காரை ஓட்டிச் சென்றதாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மருத்துவர் தலேப் என்பவரை ஜெர்மனி போலீஸார் கைது செய்துள்ளனர்.