குவைத்தின் உயரிய விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கி கௌவரவம்
இந்திய பிரதமர் மோடி இப்போது குவைத் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் குவைத் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கிடையே குவைத் நாட்டின் மிகவும் உயர்ந்த விருதான 'தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது இப்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அமீரகம், சவுதி, ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்குப் பிரதமர் மோடி ஏற்கனவே பல முறை சென்றுள்ளார். ஆனால், அங்குள்ள குவைத் நாட்டிற்கு மட்டும் இதுவரை மோடி சென்றதே இல்லை. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் குவைத்தில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதாவது அந்நாட்டின் மக்கள் தொகை 43 லட்சமாக இருக்கும் நிலையில், அதில் சுமார் 10 லட்சம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தளவுக்கு இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் நாடாக இருந்தாலும் பிரதமர் மோடி இதுவரை குவைத் நாட்டிற்குச் சென்றதே இல்லை. கடந்த 2022ம் ஆண்டு மோடி குவைத் செல்வதாக இருந்தது. அதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.