ஒரே நபரை 12 முறை மணந்து, விவாகரத்து செய்த பெண்
ஆஸ்திரியா ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கே ஒரு பெண் 12 முறை ஒரே நபரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடைசியாக 2022ல் அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்த போது சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
திருமண வாழ்க்கையில் எதாவது சிக்கல் இருந்து இருக்கும். அதனால் விவாகரத்து வாங்கி இருப்பார் என நீங்கள் சொல்லலாம். உண்மையில் இந்த 12 முறையும் ஒரே நபரைத் தான் திருமணம் செய்துள்ளார். இவருக்கும் இடையே அளவு கடந்த காதல் இருந்துள்ளது. ஆனாலும், இருவரும் 12 முறை விவாகரத்து பெற்றுள்ளனர். இதற்கான காரணம் உங்களுக்கு அதிர்ச்சி தரும்.. அரசின் உதவி தான் இந்த விவாகரத்துக்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆஸ்திரியாவில் விதவை மற்றும் விவாகரத்து பெறும் பெண்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டு அரசு உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையைப் பெறவே அவர்கள் இத்தனை முறை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளனர். இதன் மூலம் 73 வயதான அந்த பெண், சுமார் 3.42 லட்சம் அமெரிக்க டாலர் (அதாவது சுமார் 2 கோடி ரூபாய்) அளவுக்கு உதவித் தொகையைப் பெற்றுள்ளார்.
இதெல்லாம் 1980களில் தொடங்கியுள்ளது. அதாவது அந்த பெண்ணின் முதல் கணவர் 1981ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவருக்கு விதவைக்கான பென்ஷன் வழங்கப்பட்டது. இருப்பினும், 1982இல், அவர் லாரி டிரைவர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். இதனால் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், வேறு ஒரு திட்டத்தில் அவருக்கு சுமார் 28 ஆயிரம் டாலர் கிடைத்துள்ளது. இருவரும் 6 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு, லாரி டிரைவரான கணவர் தன்னுடன் போதியளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்று சொல்லி அந்த பெண் விவாகரத்து வாங்கியுள்ளார். இதையடுத்து அவரது விதவை உதவித் தொகை நிறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் வேறு திட்டத்தில் அவருக்கு சுமார் 27 ஆயிரம் டாலர் நிவாரணமாகத் தரப்பட்டது.
இப்படி விவாகரத்து பெறும் போது மாதாமாதம் உதவித் தொகையும், மறுமணத்திற்குப் பிறகு நிவாரண தொகையும் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்ட அந்த தம்பதி இதையே செய்யத் தொடக்கியுள்ளனர். கடந்த 35 ஆண்டுகளில் அந்த தம்பதி இப்படியே திருமணம்- விவாகரத்தை மாறி மாறி செய்துள்ளனர். சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த விவாகரத்து செய்துள்ளனர். இப்படியே அந்த தம்பதிக்கு மொத்தம் 12 முறை திருமணம் நடந்துள்ளது. கடைசியாகக் கடந்த 2022ம் ஆண்டு அந்த தம்பதி மீண்டும் விவாகரத்து பெற்றனர். இருப்பினும், பென்ஷன் அதிகாரிகள் விதவை உதவித் தொகை வழங்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் தான் அந்த தம்பதி செய்தது சட்டவிரோதமானது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அந்த தம்பதி மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.