மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிய ஜனாதிபதியின் பதில் என்ன? - தொழிற்சங்கள் கேள்வி
" இலங்கை மின்சார சபை 200 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு மடங்கால் குறைப்பதாகக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது என்ன பதில் கூறப்போகின்றார்?" என கேள்வி எழுப்பியுள்ள தொழிற்சங்கள், மின்சார சபையின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன.
தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டணத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்கு அவ்வாறே பேண முடியும் என்று இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளது.
இந்நிலையிலேயே மின்சார சபையின் இந்த முன்மொழிவுக்கு தொழிற்சங்கங்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
ஐக்கிய தொழிற்சங்க மற்றும் மின் பாவனையாளர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித இது தொடர்பில் தெரிவிக்கையில்,
"இலங்கை மின்சார சபை விலைச் சூத்திரத்தால் 200 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. தற்போது நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழிந்தோடுகின்றன. குறைந்த செலவிலேயே மின் உற்பத்தி இடம்பெறுகின்றது.
எனவே, உடனடியாக மின்சாரக் கட்டணத்தைக் குறைக்குமாறு தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளரான ரஞ்சன் ஜயலால் கூறினார். அது மாத்திரமின்றி டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் விசேட கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இவற்றை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து 30 சதவீதத்தால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதன் ஊடாக அரசுக்கு எந்த வகையிலும் நட்டம் ஏற்படப் போவதில்லை.
காரணம் தற்போது மின் அலகுகளுக்கு வரி அறவிடப்படுவதில்லை. ரஞ்சல் ஜனலால் கூறியதைப் போன்று மின்சார சபை 200 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவதற்கு முன்னரும், அதன் பின்னரும் கூறியதைப் போன்று 3 ஆயிரம் ரூபாவாகக் காணப்படும் மின் கட்டணத்தை 1000 ரூபாவாகக் குறைக்க வேண்டும்.
மின் கட்டணத்தில் 35 சதவீத நிவாரணத்தைத் தற்போது மின்சார சபையால் பாவனையாளர்களுக்கு வழங்க முடியும். தொழிற்சங்கத் தலைவராக இருந்த வசந்த சமரசிங்க இன்று வர்த்தக அமைச்சராகவுள்ளார்.
இவர் ஜனாதிபதியின் கூற்றை சவாலுக்குட்படுத்தும் வகையில், மூன்று ஆண்டுகளின் பின்னரே மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க முடியும் என்று கூறுகின்றார்.
வர்த்தக அமைச்சர் ஜனாதிபதியையும், மக்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை விடுத்து, இம்மாதம் முதலாம் திகதிமுதல் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார குறிப்பிடுகையில் -
"தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 3 ஆயிரமாகக் காணப்படும் மின்சாரக் கட்டணத்தை 1000 ரூபாவாகக் குறைப்பதற்கு நீங்கள் விரும்பவில்லையா என்று அன்று மக்களிடம் கேட்டார்.
அதனை அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான உங்களின் திட்டமிடல் எங்கே? தாத்தாவின் ஆடைகளையே பேரனும் அணிந்து கொண்டு பயணிக்கின்றார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
உங்களுக்கு வாக்களித்த மக்களை மறந்து விட்டீர்களா என்று ரஞ்ஜன் ஜயலாலிடம் கேட்கின்றோம். மக்களுக்காகவும், மின்சார பாவனையாளர்களுக்காகவும் ஏன் குரல் கொடுக்காமலிருக்கின்றீர்கள்? மேற்கத்தேய ஆடையணிந்த அதிகாரிகளின் ஆலோசனைகளின் படி தீர்மானங்களை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் கதியே உங்களுக்கும் ஏற்படும் என்பதை நினைவுபடுத்துகின்றோம்." - என்றார்.
இந்நிலையில் மின்சார பாவனையாளர்களின் சங்கத் தலைவர் ஏ.ஆர்.அதுல தெரிவிக்கையில்,
"ஆட்சிக்கு வர முன்னர் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க முடியும் என்று தேசிய மக்கள் சக்தியினர் குறிப்பிட்டனர். ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களையே இந்தத் திசைக்காட்டி அரசும் முன்னெடுத்துச் செல்கின்றது.
மின் கட்டணத்தை உடனடியாகக் குறைக்குமாறு அன்று தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்த வசந்த சமரசிங்க போன்றோர் வீதிக்கு இறங்கி போராடினர். இன்று அவர்கள் எங்கிருக்கின்றனர்? ரஞ்ஜன் ஜயலால் போன்றவர்களைக் கண்டுபிடிக்கவும் கடினமாகவுள்ளது." - என்றார்.
000