இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலைகளை சுயாதீனமாக தீர்மானிக்க முடியும் - முன்னாள் அமைச்சர் கஞ்சன சுட்டிக்காட்டு
இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்கள் லிமிடடின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டீ.எஸ். ராஜகருணவின் அண்மைய அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, ஏனைய செயற்பாட்டாளர்களை சாராமல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மாதாந்த விலையை தீர்மானிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலாபகரமானது என்றாலும் நாட்டிலுள்ள வெளிநாட்டு பெற்றோலியக் கம்பனிகள் காரணமாக சுயாதீனமாக இயங்க முடிவில்லை என்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு அரசியல் தலையீடுகள் வழிவகுத்தாகவும் இராஜகருண குற்றம் சுமத்தியருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் முன்னாள் அமைச்சர் தெரிவித்திருப்பதாவது, கடந்த அரசாங்கம் ஏனைய செயற்பாட்டாளர்களுடன் விற்பனை அல்லது விலை நிர்ணயம் ஆகியவற்றில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடவில்லை.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை நிர்ணயம் சுயாதீனமானது ஏனைய போட்டியாளர்களுடனோ அல்லது செயற்பாட்டாளர்களுடனோ எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு தொழில்துறை பங்கேற்பாளராக செயற்படுகிறதே தவிர கட்டுப்பாட்டாளராக அல்ல.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செலவை பிரதிபலிப்பதற்காகவே விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதன் மாதாந்த விலைகளை சுயாதீனமாக தீர்மானிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000