உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தீர்மானித்தப்படி நடத்துவதால் 5 இலட்சம் இளைஞர்களின் வாக்குரிமை இழக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு கவலை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னர் தீர்மானித்தப்படி நடத்துவதால் சுமார் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படுவதோடு பல சிக்கல்கள் ஏற்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டு வாக்காளர் பதிவிற்கேற்ப 16,800,855 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவிற்கேற்ப 17,140,354 பேர் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, அதன் வித்தியாசம் 339,499 ஆக கருதப்படும் நிலையில், அவர்களுக்கு உள்ளூராட்சி தே்ரதலில் வாக்களிக்கும் உரிமை பறிபோகும்.
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வாக்குகளைப் பயன்படுத்திய அநேக இளைஞர்களுக்கு அதன் பின்னர் இடம்பெறும் எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கும் உரிமை கிடைக்காது எனவும் அது ஒரு சிக்கலான நிலைமை எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் அங்கீகரிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான இல 30 உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தத்திற்கமைய வேட்பாளர் பட்டயலில் 25 வீதம் இளைஞர்கள் பிரநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் சந்தர்ப்பத்தில் அவ்வாறான ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பதால், இளைஞர்கள் பிரநிதித்துவம் 25 வீதம் இல்லாமை மற்றுமொரு சிக்கல் என கூறப்படுகிறது.
அதற்கு முதல் வேட்புமனுக்களை வழங்கிய அநேகமானோர் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையும் மற்றுமொரு நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பழைய வேட்புமனுக்களுக்கமைய நடத்துவதால் பல நெருக்கடிகள் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.