பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை தீவிர நகர்வு - புடினுக்கு எழுத்துமூல கடிதமும் கையளிப்பு
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை, அதன் விருப்பத்தை தற்போது தலைமையத்துவத்தை ஏற்று செயல்படும் ரஷ்யாவுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கடந்த 21 ஆம் திகதி இலங்கையின் தூதுகுழு ரஷ்யாவின் கசான் நகருக்குச் சென்றது. இந்த குழுவுக்கு வெளிவிவார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை தாங்குகிறார்.
அருணி விஜேவர்தன தலைமையிலான குழு, பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
அத்துடன், பிரிக்ஸ் அமைப்பில் இணைய விரும்பு இலங்கையின் விருப்பத்தை வெளிப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயாக்கவால் எழுத்துமூலம் அனுப்பப்பட்ட கடிதத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கையளிப்பதற்கும் நடவடிக்கைகளை குறித்த குழுவினர் எடுத்துள்ளனர்.
பிரிக்ஸ் மாநாடு கடந்த 22 ஆம் திகதி ரஷ்யாவின் கசான் நகரில் ஆரம்பமானதுடன், இன்று 24ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.
ஜி7 நாடுகளுக்கு இணையாக சர்வதேச பொருளாதாரத்தில் மாற்று அணியாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பல்வேறு நாடுகள் இணை உறுப்பு நாடுகளாக உள்ளன.
மாநாட்டில் இலங்கையின் உரையை வெளிவிவார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, வாசிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000