கனடாவில் இனவெறி சம்பவம்
கனடாவின் ஒன்ராறியோவில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார் அஷ்வின் அண்ணாமலை என்னும் இந்தியர். அவர் கனேடிய குடியுரிமை பெற்றவர், அப்போது ஒரு பெண் அவரைப் பார்த்து மோசமான சைகை காட்டியுள்ளார்.
நான் உங்களை என்ன செய்தேன், நான் என் பாட்டுக்குச் சென்றுகொண்டுதானே இருக்கிறேன், நான் என்ன தவறு செய்தேன், அப்புறம் நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் அஷ்வின். அவரது கேள்விக்கு பதிலளிக்கமுடியாமல் திணறிய அந்தப் பெண், கெட்ட வார்த்தை சொல்லித் திட்டியுள்ளார்.
நீங்கள் உங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்றும், கனடாவில் ஏராளம் இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு அஷ்வின் நான் ஒரு கனேடிய குடிமகன், நான் ஒரு மாணவன் அல்ல எனக் கூற, அந்தப் பெண்ணோ, உங்கள் அம்மாவும் பாட்டியும் இந்தியர்கள்தானே என்று கூறியுள்ளார்.
அது குற்றமா என அஷ்னின் கேட்க, ஆம், ஏராளமான இந்தியர்கள் கனடாவை ஆக்கிரமித்துள்ளீர்கள் அது குற்றம்தான் என்கிறார் அந்தப் பெண். இப்படியே தொடர்கிறது அந்த வீடியோ. இப்படிப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை ஆசிய நாட்டவர்கள் தொடர்ந்து சந்தித்து வருவதால், நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார் அஷ்வின்.
அஷ்வின் இந்த வீடியோவை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட, கனேடிய அரசியல்வாதிகள் சிலரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நடந்த சம்பவத்துக்காக அஷ்வினுக்கு ஆறுதல் கூறியுள்ளதுடன், வருத்தமும் தெரிவித்துள்ளார்கள்.
வாட்டர்லூ பொலிசார் அஷ்வினை அணுக, அதைத் தொடர்ந்து அஷ்வின், நடந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
கனடா இந்திய தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற இனவெறுப்பு சம்பவங்கள் கனடாவில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.