குஜராத்துக்கு புயல் எச்சரிக்கை விடுப்பு
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழைக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஐ தாண்டியுள்ளது.
இறந்த 36 பேரில் 13 பேர் சுவர் இடிந்தும், 20 பேர் நீரில் மூழ்கியும், இருவர் மரங்கள் விழுந்ததாலும் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்களை படகு மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். குஜராத்தில் 122 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், குஜராத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், கட்ச் மாவட்டத்தில் தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்களை நிரந்தர தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்ச், ஜம்னாநகர், மோர்பி, ஜாம்நகர், தேவபூமி துவாரகா, போர்பந்தர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு கட்ச் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வெள்ளிக்கிழமை மதியம் அரபிக்கடலில் வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கட்ச் மாவட்டத்தில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததையடுத்து, மக்கள் பள்ளிகள், கோவில்கள் அல்லது பிற கட்டிடங்களில் தஞ்சம் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்தாசா, மாண்ட்வி மற்றும் லக்பத் தாலுகாக்களில் வசிக்கும் மக்கள் பள்ளிகள் அல்லது பிற கட்டிடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி கட்ச் கலெக்டர் அமித் அரோரா வீடியோ வெளியிட்டார். இதுபோன்ற ஏழை மக்களுக்கு அவர்களின் வீடுகளில் தங்குமிடம் வழங்க முன்வருமாறு உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.