ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி - அஞ்சல் மூல வாக்களிப்புக்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது - தேர்தல்கள் ஆணைக்குழு
எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
இந்த கால அவகாசம் எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவிருந்த நிலையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உரிய காலப்பகுதிக்குள் அல்லது அதற்கு முன்னர், அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதுவரையில் 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
அவர்களில் 8 சுயேட்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 8 வேட்பாளர்களும், வேறு கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.
அதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைக் காட்டிலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 8 இலட்சத்து 76 ஆயிரத்து 469 பேர் புதிய வாக்காளர்களாகத் தகுதிபெற்றுள்ளனர்.
000