நோயாளிகளே பாதிப்புகளை எதிர்நோக்க நேரும் - தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என விலகிக்கொண்டது அகில இலங்கை தாதியர் சங்கம்
அரச சேவை தொழிற்சங்கங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தில், தமது தொழிற்சங்கம் பங்கேற்கமாட்டாதென, அகில இலங்கை தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி மெதிவத்த இது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில்; சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதால் நோயாளிகளே பாதிப்புகளை எதிர் நோக்க நேரும் என குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவை தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை மேற்கொண்டு, இரண்டு தினங்களுக்கு பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளன. இந்த போராட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை தாதிமார் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட போதும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான காலம் இதுவல்ல. இந்த உறுதியான நிலைப்பாட்டில் தமது தொழிற்சங்கம் உள்ளதாகவும் அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கோரிக்கைகள் பலவற்றை முன்னிட்டு அரச சேவையின் 200க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுக்கள், வைத்தியசாலை, பாடசாலைகள், தபால், கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பொது அரச சேவையை பாதிக்கும் நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளதாக தரிவிக்கப்படுகின்றது
தபால், கிராம உத்தியோகத்தர, முகாமைத்துவ சேவை அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள், அலுவலக உதவி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள், சுகாதார சேவை உதவி அதிகாரிகள் உள்ளிட்ட அரச சேவையிலுள்ள தொழிற்சங்கங்கள் பல சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்கத்தற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அரச சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் தம்மிக்க முணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்கத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் வடக்கின் பாடசாலைகள் வழமைபோன்று ஆசிரியர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000