சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் - நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தார் அமைச்சர்
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை புதிதாக வந்துள்ள அத்தியட்சகர் சீர்செய்ய முற்பட்ட வேளை ஏற்பட்ட பிரச்சினையாக சொல்லப்படும் நிலையில் இன்று காலை வைத்தியசாலைக்கு நேரடிய விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை ஆராய்ந்தார்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் இன்றையதினம் இன்று சனிக்கிழமை அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலைக்கு வருகை தந்து வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டு நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24 மணித்தியாளங்களாக தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
இதனைவிட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள், ஆளணி காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
மேலும் வைத்தியசாலையில் கூடிய பொதுமக்கள் வைத்தியசாலை சனிக்கிழமை இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அவர்களுக்கு ஆதரவளித்தும் வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் பொதுமக்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சரின் கவனத்தக்கு கொண்டு சென்று சுமுகமான தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000