ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரைவில் புதிய சட்டமூலம் - தேர்தலில் விரல்களுக்கு மை பூசும் முறைமை இனி அவசியமில்லை - சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு
19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக ஜக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
இன்று மதவாச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஜக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக ஒரு இடத்தில் 5 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று 19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் மற்றுமொரு இடத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையில் இது தொடர்பான யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். விரைவில் இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கும் எதிர்பார்த்துள்ளோம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் தேர்தல்களின் போது விரல்களுக்கு மை பூசும் முறைமை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், பப்ரல் (Pafferal) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி 'மவ்பிம' என்ற சிங்கள நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியில் 2010ஆம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவானது கணினி மயமாக்கப்பட்டு வருவதால், ஒருவர் இரு இடங்களில் வாக்களித்ததாகப் பதிவு செய்யப்பட்டால், அவர் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, விரல்களுக்கு மை பூச வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கான செலவை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு வாக்காளர் இரு இடங்களில் வாக்களிக்க வாய்ப்புள்ளது என்றதன் அடிப்படையில் விரல் மை பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
தனி நபர்களின் பதிவை கணினிமயமாக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே மாதிரியான பெயர்கள் கண்டறியப்படும் என்றும், அடையாள அட்டை எண்கள் போன்றவை சரிபார்க்கப்படுவதால், இரு இடங்களில் தனிநபரின் வாக்குகள் பதிவாவதற்கு வாய்ப்பில்லை என கூறினார்.
எனவே, விரல்களுக்கு மை பூசுதல் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டார்.
000