பிரித்தானிய தேர்தல்: முடிவுக்கு வருகிறது 14 ஆண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சி
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் லேபர் கட்சி ஆட்சி அமைக்கிறது.
தோல்வி குறித்து ரிஷி சுனக், “தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்தேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது.
நம் நாட்டின் எதிர்காலம் சார்ந்து நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். என்னை மன்னிக்கவும்” எனத் தெரிவித்தார். அவர் வடக்கு இங்கிலாந்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் லேபர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுக்குப் பிறகு அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார். 2010 தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 61 வயதான கீர் ஸ்டார்மர், பிரிட்டன் பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
.000