காஸாவில் அச்சமடையும் பொதுமக்கள் - குழந்தைகளிடையே பரவும் தோல் நோய்
காஸாவில் குழந்தைகளிடையே பரவும் ஆபத்தான தோல் நோய்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இஸ்ரேலின் குண்டு மழையிலும் விமானத் தாக்குதலிலும் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்தவர்கள், கண்ணுக்குப் புலப்படாத உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
போதுமான உணவு இல்லை. தூய்மையான தண்ணீர் இல்லை. தங்குமிடம் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் சோர்வடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களிலும் கைவிடப்பட்ட கட்டடங்களிலும் பள்ளிக் கூடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
ஏராளமானோர் திறந்தவெளியில் படுத்துறங்குகின்றனர். கழிவறை, தண்ணீர், குளியல் அறை இல்லாமல் அங்கு மக்கள் தவிக்கின்றனர்.இந்த நிலையில் காஸா வட்டாரத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று அங்கு உள்ள மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும் தெரிவிக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக தொற்றுநோய்ச் சூறாவளி தொடங்கியிருக்கிறது என்று யுனிசெஃப் அமைப்புக்கான தலைமைப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.
போர் சூழல் காரணமாக காஸாவில் உள்ள குழந்தைகள், கடுமையான நீரிழப்பு, சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக பாலஸ்தீன பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 50,000-க்கும் அதிகமான மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோலின் மேற்பகுதியில் சிவப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள், அம்மை நோய்கள் என பல தீவிர நோய்கள் பரவி வருகின்றன.
இதையும் ஒரு காரணமாக கூறி காஸாவை விட்டு பாலஸ்தீன மக்களை அப்புறப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இது குறித்து காஸாவில் உள்ள ஒரு தாய் கூறுகையில் இரவு முழுக்க எனது மகன் தூங்க முடியாது, ஏனென்றால் அவன் சொறிவதை நிறுத்தவே முடியாது.
மற்றொருவர் கூறுகையில், நாங்கள் தரையில் தூங்குகிறோம், எங்களுக்கு அடியில் மணலில் புழுக்கள் வெளியேறும். எங்கள் குழந்தைகளை பழையபடி குளிப்பாட்ட முடியாது. தொற்று ஏற்பட்ட இடத்தை கழுவி சுத்தம் செய்ய தண்ணீர் உள்பட சுகாதாரப் பொருட்கள் எதுவும் இல்லை. இவ்வாறு அப்பகுதி மக்கள் பலவாறு தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.