
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம்பெறும் சிலர் அவர்களுக்கு ஆதரவு – அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டு
போதைப் பொருள் வர்த்தகர்களிடம் பணம் பெற்று யுக்திய இராணுவ நடவடிக்கையை சீர்குலைக்க முயற்சி செய்வோருக்கு அடிபணியப் போவதில்லை என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தள்ளார்.
இவ்வாறு பணம் பெற்று போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவு வழங்குவோரில் சில சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டின் எதிர்காலம் மற்றும் எமது எதிர்கால பரம்பரையினரின் நலனைக் கருத்திற் கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாமென, அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவுற்றுள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாட்டிலிருந்து போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை தீவிரப் படுத்துமாறு, கடந்த டிசம்பரில் பொலிஸ்மா அதிபர் உட்பட சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு உத்தரவிட்டேன்.
இந்நடவடிக்கைகளில் எவரானாலும் சரி அரசியல்வாதிகள் பிரபுக்கள் உட்பட எத்தகைய பதவிகள் தராதரங்களைக் கொண்டிருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000