பாலஸ்தீனத்திற்கு அமைதிப்படையை அனுப்ப தயார் - மலேசியா பிரதமர் அறிவிப்பு!
ஐக்கிய நாட்டு நிறுவனம் அனுமதி வழங்கினால் பாலஸ்தீனத்திற்கு அமைதிப்படையை அனுப்புவது தொடர்பில் இந்தோனீசியாவுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
இந்தோனீசியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோவுடன் நேற்றுமுன்தினம் ஜூலை 1ஆம் திகதி, அன்வார் தொலைபேசி வழியாகப் பேசினார்.
இரு தலைவர்களின் கலந்துரையாடலில் பாலஸ்தீனம் குறித்த பேச்சு முக்கிய பங்கு வகித்தது.
மலேசியா - இந்தோனீசியா அனைத்துலக அமைதிப்படையில் ஒத்துழைப்பு எனும் யோசனையையும் இந்த ஒத்துழைப்பை ஆசியான் வட்டாரம் முழுமைக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தையும் தாம் வரவேற்பதாக மலேசியப் பிரதமர் கூறினார்.
தொலைபேசி வழியான கலந்துரையாடலில் தாங்கள் நடப்பு விவகாரங்கள் குறித்துப் பேசியதாக அவர் சொன்னார்.
குறிப்பாக, வட்டார, அனைத்துலக ஒத்துழைப்பு, அமைதி ஆகியவை பற்றிய திரு பிரபோவோவின் கண்ணோட்டம் பற்றித் தாங்கள் பேசியதாகப் பிரதமர் அன்வார் கூறினார்.
பாலஸ்தீனத்தில் நிலவும் மனிதநேய நிலவரம் குறித்துப் பேசுகையில், மலேசியா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடலில், சென்ற வாரம் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்துகொண்ட திரு பிரபோவோ விரைவில் நலம்பெற வாழ்த்துத் தெரிவித்ததாகவும் மலேசியப் பிரதமர் கூறினார். ராணுவச் சேவையின்போது ஏற்பட்ட காயங்களிலிருந்து நலம்பெற திரு பிரபோவோ அந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டார்.
மலேசியா, இந்தோனீசியா இரண்டுக்குமே அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்ட அனுபவம் உண்டு.
ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அமைதிப்படை நடவடிக்கைகளில் மலேசிய ராணுவத்தினர் 862 பேர் ஈடுபட்டிருப்பதாக ஐநா கூறியது. அவர்களில் கிட்டத்தட்ட 825 பேர் துருப்பினர் என்று அது தன் அறிக்கையில் குறிப்பிட்டது.
1960ஆம் ஆண்டு முதல், 38க்கும் மேற்பட்ட அமைதிப்படை நடவடிக்கைகளில் மலேசியா பங்கெடுத்துள்ளது. லெபனானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் அதில் அடங்கும் என்று ஐநாவுக்கான மலேசியாவின் நிரந்தர படைக்குழுவின் ராணுவ ஆலோசகர் கர்னல் ஷம்சுரி நூருதின் பிப்ரவரி மாதம் ஆற்றிய உரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
ஐநா அறிக்கையில், ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் இந்தோனீசிய ராணுவத்தினர் 2,715 பேர் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மலேசியப் பிரதமர் அன்வார், பாலஸ்தீனத்திற்கு வலுவான ஆதரவுக் குரல் எழுப்புவர். ஹமாஸ் தரப்புடனான மலேசியாவின் உறவுகளைத் தற்காத்துப் பேசுபவர் என்பதை சிஎன்ஏ சுட்டிக்காட்டியது.
காஸா போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு நெருக்குதல் தர அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும் தயங்குவது குறித்துத் திரு அன்வார் ஏற்கெனவே கவலை தெரிவித்ததையும் அது குறிப்பிட்டது.
000