
சம்பந்தனின் மறைவு நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய இழப்பாகும் : சஜித் பிரேமதாச
இரா. சம்பந்தனின் திடீர் மறைவால் நான் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். சம்பந்தன் அவர்கள் சிறந்ததொரு மக்கள் தலைவர் போல் ஓர் தலைசிறந்த தேசிய தலைவருமாவார். நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக முன்நின்று இனங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் சகோதரத்துவம், நட்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்திய, அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து மாவட்ட மக்களையும் ஒன்றுபோல் கருதி நடந்து கொண்ட மக்கள் தலைவர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சம்பந்தனின் மறைவு நாட்டுக்கும் மக்களுக்கும், நல்லிணக்கத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பாரிய இழப்பாகும். சம்பந்தன் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க, கௌரவமான சேவை எப்போதும் போற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று (02) பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சம்பந்தனின் பூதவுடலுக்கு தனது மரியாதையை செலுத்தினார். இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.